எத்தனை மலைகள் எத்தனை நதிகள்...

எத்தனை மலைகள் எத்தனை நதிகள்,
எல்லாம் கடந்து இந்தப் பறவைகள்,
கூடுகள் தேடியே பறக்கின்றன - தங்களின்
கூடுகள் தேடியே பறக்கின்றன..!

கண்டம் விட்டு கண்டம் கடந்து,
தேசம் விட்டு தேசம் கடந்து,
கூட்டை நோக்கியே பறக்கின்றன -
சிறு
கூட்டை நோக்கியே பறக்கின்றன…

அகண்ட பூமியின் எல்லைகளை,
கடந்து செல்லும் புள்ளினங்கள்,
மனிதன் கூட அறியாத,
புவியியல் மாற்றத்தை பார்க்கின்றன - பல
புதுப்புது அனுபவம் சேர்க்கின்றன…

அவை காணாத நீர்நிலைகள் இல்லை…
அவை அமராத மரக்கிளைகள் இல்லை…
அவை பார்க்காத சகபறவை இல்லை…
அவை கேட்காத புது மொழிகள் இல்லை…

எல்லாம் கடந்து ஒற்றை இலக்குடன்,
இருப்பிடம் நோக்கியே பறக்கின்றன - தங்களின்
இருப்பிடம் நோக்கியே பறக்கின்றன…

எத்தனை மலைகள் எத்தனை நதிகள்,
எல்லாம் கடந்து இந்தப் பறவைகள்,
கூடுகள் தேடியே பறக்கின்றன - சிறு
கூடுகள் தேடியே பறக்கின்றன..!

பெரிய கூடுகள் இருக்கலாம்..! மிக
சிறந்த சூழலும் இருக்கலாம்..!
நிறைந்த உணவுகள் கிடைக்கலாம் - அவை
நிம்மதியாக வசிக்கலாம் - ஆனால்

அந்த நிலங்கள் - அவற்றின்
சொந்த நிலமில்லை…
அந்தக் கூடுகள் - அவற்றின்
சொந்தக் கூடில்லை…
வறண்ட பூமியாய் இருந்தாலும் - சில
வசதிகள் கூட குறைந்தாலும்
தங்களின் கூட்டை நோக்கியே - அவை
தவிப்புடன் வேகமாய் பறக்கின்றன..!

எத்தனை மலைகள், எத்தனை நதிகள்,
எல்லாம் கடந்து இந்தப் பறவைகள்,
கூடுகள் தேடியே பறக்கின்றன - தங்களின்
கூடுகள் தேடியே பறக்கின்றன..!

கோடி பறவைகள் இருக்கலாம் - அவை
கூடுத லாக ஈர்க்கலாம் - தன்
ஜோடிப் பறவையைத் தவிரஓர்
வேடிக்கை கூட பார்ப்பதில்லை… - அவை
விரும்பி வந்தாலும் ஏற்பதில்லை…

தனது கூடு, தனது இணை,
தனது பார்ப்பு, தனது நிலம்,
இவற்றைத் தவிர எதுவும் பெரிதாய்
அவற்றுக்கு இங்கே தோணவில்லை…
அடுத்தவர் பொருளில் நாட்டமில்லை…

எத்தனை மலைகள் எத்தனை நதிகள்,
எல்லாம் கடந்து இந்தப் பறவைகள்,
கூடுகள் தேடியே பறக்கின்றன - சிறு
கூடுகள் தேடியே பறக்கின்றன..!

கண்டம் விட்டு கண்டம் கடந்து,
தேசம் விட்டு தேசம் கடந்து,
கூட்டை நோக்கியே பறக்கின்றன -
சிறு
கூட்டை நோக்கியே பறக்கின்றன…







Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form