வேகமாய் ஓடும் ரயில் போல் வாழ்க்கை
எந்த ஸ்டாப்பிலும் நிற்காது
எதையும் நீங்கள் தவறவிட்டால்
மீண்டும் திரும்பி கிடைக்காது
வேகமாய் ஓடும் ரயில் போல் வாழ்க்கை
எந்த ஸ்டாப்பிலும் நிற்காது..!
(இது எந்த ஸ்டாப்பிலும் நிற்காது..!)
சின்ன வயதில் இழந்ததை எல்லாம்
பெரியவன் ஆனபின் பெறலாம் என்று
கற்பனை மட்டும் செய்யாதே… - வெறும்
கனவில் தோரணம் நெய்யாதே….
கடந்தவை எல்லாம் கடந்தவை தான்
முடிந்தவை எல்லாம் முடிந்தவை தான்
முடியில் ஒன்று உதிர்ந்தால் கூட
மீண்டும் வந்து முளைக்காது..!
உதிர்ந்தவை மீண்டும் முளைத்தால் கூட
பழையவையாக இருக்காது - நாம்
இழந்தவையாக இருக்காது…!
வேகமாய் ஓடும் ரயில் போல் வாழ்க்கை
எந்த ஸ்டாப்பிலும் நிற்காது
எதையும் நீங்கள் தவறவிட்டால்
மீண்டும் திரும்பி கிடைக்காது - ஆம்
(மீண்டும் திரும்பி கிடைக்காது..!)
எந்தக் கவலையும் இல்லாமல்
தூண்டில் போட்டுக் காத்திருந்தேன்
காலம் போவது தெரியாமல்
மணிக்கணக் காக பார்த்திருந்தேன்..!
ஒற்றைச் சிறுமீன் கிடைத்தாலும்
மகிழ்ச்சியில் பொங்கிய இதயத்தை
கிலோ கணக்கில் மீன்வாங்கி
குழம்புச் சட்டியில் தேடுகிறேன்
செத்த மீன்தான் கிடக்கிறது
தொலைத்த மகிழ்ச்சியோ கிடைக்கவில்லை..! - அந்த
பழைய மீனைநான் பிடிக்கவில்லை..! - இன்னும் அந்த
பழைய மீனைநான் பிடிக்கவில்லை..!
வேகமாய் ஓடும் ரயில் போல் வாழ்க்கை
எந்த ஸ்டாப்பிலும் நிற்காது
எதையும் நீங்கள் தவறவிட்டால்
மீண்டும் திரும்பி கிடைக்காது - ஆம்
மீண்டும் திரும்பி கிடைக்காது..!