ஒன்னத் தவிர அத்தனையும் அடகுல தான் இருக்கு..!

ஒன்னத் தவிர அத்தனையும்
அடகுல தான் இருக்கு..!
ஆனாலும் என் வாழ்க்க
முழுநிறைவா இருக்கு..!

நீ மட்டும் கிடைக்காம
வேறொருத்தி கிடைச்சிருந்து
நூறு பவுன் கொடுத்தாலும்
வெறுமையில் தான் வாழ்ந்திருப்பேன்… - நீயில்லா
வறுமையில் தான் வாழ்ந்திருப்பேன்

அழகே…!

ஒன்னத் தவிர அத்தனையும்
அடகுல தான் இருக்கு..!
ஆனாலும் என் வாழ்க்க
முழுநிறைவா இருக்கு..!

இரவுகளில் நெடுந்தூரம்
ஈசியாரில் பயணித்து
டீக்குடித்துத் திரும்பி வரும்
சுகமான அனுபவத்தை…
வழிநெடுக கதை பேசி
சைட் மிரரில் முகம் பார்த்து
புன்னகைத்துப் பூரித்த
பொன்னான பொழுதுகளை
இன்னொருத்தி தந்திருக்க
வாய்ப்பில்லை பெண்ணே..!
கற்பனையில் கூட என்னால்
முடியவில்லை கண்ணே..!

அதனால்…!

ஒன்னத் தவிர அத்தனையும்
அடகுல தான் இருக்கு..!
ஆனாலும் என் வாழ்க்கை
முழுநிறைவா இருக்கு..!


சின்ன சின்ன சண்டைகளும்
சண்டைக்குப் பின்னாலே
திரும்பி வந்து கொஞ்சுகிற
முடிவில்லா தொல்லைகளும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கரைந்து போகும் ஆணவமும்
காலடியில் நான் வீழ்ந்து
சரணடையும் அனுபவமும்
வேறொருத்தி யோடெனக்கு
நடந்திருக்க முடியாது..!
நீ இல்லா வாழ்க்கையினை
நினைத்துப் பார்க்க முடியாது

அமுதே…!

ஒன்னத் தவிர அத்தனையும்
அடகுல தான் இருக்கு..!
ஆனாலும் என் வாழ்க்க
முழுநிறைவா இருக்கு..!







Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form