இது அழகிய பாதை..! எனக்குப் பழகிய பாதை..!

இது அழகிய பாதை
எனக்கு பழகிய பாதை
தொலைவில் தெரியும்
மலைகளை நோக்கி
வளைந்து செல்லும்
எழில் மிகு பாதை

இது கரடு முரடாக இருந்தாலும்
பல குண்டும் குழியில் விழுந்தாலும்
இதயம் வழுக்கிச் செல்லுகிற
இயற்கை சூழ்ந்த பசுமையின் பாதை

இது அழகிய பாதை
எனக்கு பழகிய பாதை

நடவு செய்யும் பெண்கள் தொலைவில்
குனிந்து எதையோ தேடுகிறார்..!
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும்
வாழ்க்கையை வயலில் தேடுகிறார்
பறவையின் ஒளியும் பாட்டும் என்னை
மந்திரம் போல மயக்கியது
எருமை மாடுகள் கூட்டம் வந்து
எதிரே புழுதியை கிளப்பியது

இது அழகிய பாதை
எனக்கு பழகிய பாதை
தொலைவில் தெரியும்
மலைகளை நோக்கி
வளைந்து செல்லும்
எழில் மிகு பாதை

தெப்பக்குளத்து அல்லிகள் வாயில்
தேனைப் பருகும் வண்டுகளும்
தொப்பென குதித்து நீச்ச லடிக்கும்
சின்னஞ்சிறிய வாண்டுகளும்
கல்யாணி அம்மன் கோயிலை கடந்து
சைக்கிளை மெல்ல ஓட்டுகிறேன்
வெள்ளாட்டுக் கூட்டம் வழியை மறிக்க
பெல்லை அடித்து ஓட்டுகிறேன்

இது அழகிய பாதை
எனக்கு பழகிய பாதை
தொலைவில் தெரியும்
மலைகளை நோக்கி
வளைந்து செல்லும்
எழில் மிகு பாதை

ராம நதியின் அணைக்குச் செல்லும்
ரம்யமான பாதை இது
பாம்புகள் கூட தொல்லை இல்லாமல்
கடந்து போகும் பாதை இது
பாதை நெடுகிலும் ஓடை மலர்கள்
வரிசை கட்டி வரவேற்கும்
மெல்லிய காற்று முகத்தில் பட்டு
முடியை கலைத்து விளையாடும்

இது அழகிய பாதை
எனக்கு பழகிய பாதை
தொலைவில் தெரியும்
மலைகளை நோக்கி
வளைந்து செல்லும்
எழில் மிகு பாதை

இது கரடு முரடாக இருந்தாலும்
பல குண்டும் குழியில் விழுந்தாலும்
இதயம் வழுக்கிச் செல்லுகிற
இயற்கை சூழ்ந்த பசுமையின் பாதை.







Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form