இருவரும் சந்தித்தோம்..!

இருவரும் சந்தித்தோம் - நாம்
இருவரும் சந்தித்தோம்..!
நீண்டகால இடைவெளியில்
ஆண்டுகள் பலவும் சென்று விட
மீண்டும் சந்தித்தோம்..! நாம்
மீண்டும் சந்தித்தோம்..!

ஒருவரை ஒருவர் தேடுகிறோம்
நம் பழைய முகத்தை தேடுகிறோம்
பழுத்துச் சுருங்கிய புதிய முகத்தில்
பழைய முகத்தை தேடுகிறோம்..! - நம்
இளைய முகத்தை தேடுகிறோம்..!
காலம் வரைந்த கிறுக்கல்கள்
முகத்தை மாற்றி விட்டதடி
உடலும் தோலும் மட்டுமல்ல
உள்ளமும் வரண்டு விட்டதடி - நம்
உள்ளமும் வரண்டு விட்டதடி..!

இருவரும் சந்தித்தோம் - நாம்
இருவரும் சந்தித்தோம்..!
நீண்டகால இடைவெளியில்
ஆண்டுகள் பலவும் சென்று விட
மீண்டும் சந்தித்தோம்..! நாம்
மீண்டும் சந்தித்தோம்..!

காலச்சக்கரம் மீண்டும் சுழற்றி
பள்ளிக் கூட வாழ்வில் நிறுத்தி
பழைய உன்னைக் காண்கின்றேன்..!
நீயும் அதையே காண்கின்றாய் ..!
துருதுரு விழிகள் இன்றில்லை..- என்
துடிப்பும் வேகமும் இன்றில்லை..!
கருத்த கூந்தல் இன்றில்லை..! - உன்
கன்னக் குழியும் இன்றில்லை..!
எல்லாம் மறைந்து விட்டதடி - நம்
இளமை கரைந்து விட்டதடி..!

இருவரும் சந்தித்தோம் - நாம்
இருவரும் சந்தித்தோம்..!
நீண்டகால இடைவெளியில்
ஆண்டுகள் பலவும் சென்று விட
மீண்டும் சந்தித்தோம்..! நாம்
மீண்டும் சந்தித்தோம்..!

என்ன பேசவோ தெரியவில்லை‌‌..!
எதையும் பேசிப் பயனில்லை..!
பழைய பேச்சின் ஸ்வாரஸ்யம்
மீண்டும் இருக்க வாய்ப்பில்லை..! - அது
மீண்டும் இருக்க வாய்ப்பில்லை..!
மௌனம் என்பது மொழியாக
விழிகள் மனதின் வழியாக
மெதுவாய் பேசிக் கடக்கின்றோம்..!
அவரவர் வழியில் நடக்கின்றோம்..! - நாம்
அவரவர் வழியில் நடக்கின்றோம்..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form